இலங்கையில் வரலாறு காணாத பாராளுமன்றம் – இன்று சபையில் நடந்தது இதுதான்
15 Nov,2018
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றினார். இதன்போது எரிபொருள் விலை சூத்திரம், நாட்டினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது, வாழ்க்கைச்செலவு அதிகரித்தமை, மத்தியவங்கியினுடைய பிணை விவகாரம், வட்டி அதிகரிப்பு, அரசாங்கத்தினுடைய சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்றமை, முதலீட்டாளர்களிடத்தில் லஞ்சம் கோரிமை போன்ற பலவிடயங்கள் தொடர்பிலே, கடந்த அரசாங்கத்தின் மீது மக்களிடம் அதிருப்தி நிலைமை நிலவியிருந்தது என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுமாத்திரமல்லாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டவர்கள் மீதான கொலை முயற்சி தொடர்பிலும் கடந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி நிலைமை காணப்பட்டமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே இவ்வாறான ஒரு நிலையில் தான் அரசியலமைப்பிற்கு அமைய, ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை உபயோகித்து அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும், அவ்வேண்டுகோளொன்றின் அடிப்படையிலேயே தான் பிரதமராக பதிவியேற்றதாகவும் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் நிலவும் பிரச்சினை தொடர்பான தீர்வை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக பொதுத்தேர்தலை நடாத்த வேண்டும். எனவே பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விசேட உரையை நம்பமுடியாது எனத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தார்.
லக்ஸ்மன் கிரியெல்ல கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை மேற்கொள்ள சபாநாயகர் முயற்சித்த சந்தர்ப்பத்தில், அங்கு அமளிதுமளி ஏற்பட்டதோடு, சபாநாயகரின் இருப்பிடத்திற்கு அருகில் நின்று உறுப்பினர்கள் கருத்துமுரண்பாட்டில் .ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. இதனிடையே கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலுனு அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்ததுடன், அவரது கையிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில், சபையை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தொடர்ந்து சபையை கொண்டுநடத்தும் நோக்கில் தொடர்ந்து 15 நிமிடங்கள் அவ்விடத்திலேயே சபாநாயகர் அமர்ந்திருந்தார்.
பின்னர் சபையில் எந்தவித மாற்றமும் இடம்பெறாத நிலையில், பாராளுமன்ற சபையிலிருந்து சபாநாயகர் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சபை தொடரலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் அங்கேயே உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.
இருப்பினும், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியின் பின்னர், சபாநாயகருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாளை 1.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்ற கூட்டப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.