ரணிலே எனது பிரதமர்- மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார்
07 Nov,2018
ரணிலே எனது பிரதமர்- மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கார
மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மனுச நாணயக்கார தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன.
அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்,நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றும் அரசியல் முடிவையெடுத்தேன்
உங்களின் நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையொன்றை வாசிக்க நேர்ந்தது.
பதவிப்பிரமாணம் செய்துள்ள புதிய அரசாங்கத்தை எந்த உலகநாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது,நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறான சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன்.
இதன் காரணமாக எனது ஜனநாயக- அரசியல் நம்பிக்கைகள் மற்றும் மனச்சாட்சியின் அடிப்படையில் நான் எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கின்றேன்.