நெருக்கடியான அரசியல் சூழலால் அமெரிக்கா, ஜப்பான் உதவிகளை முடக்கும் – ரணில்
04 Nov,2018
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பில்லியன் கணக்கான அபிவிருத்தி நிதியுதவிகளை முடக்கும் என்று பதவியிறக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவரது திடீர் பதவி நீக்கத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜப்பான் சுமார் 500 மில்லியன் டொலர் நிதியுதவிகளை வழங்க திட்டமிருந்தது. குறித்த திட்ட நிதியுதவிகளை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்,
அத்துடன், தேசிய நல்லிணக்க உடன்படிக்கைக்கு ஏற்றவகையில் செயற்படாத பட்சத்தில், இலங்கையின் ஏற்றுமதி தீர்வை சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையுடன் விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களாக இலங்கை அரசியலில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலையை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை பதவி நீக்கம் செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
இவ்வாறான ஒரு அதிர்ச்சி நகர்வானது நாட்டை அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளதாக ரொய்ட்டர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பதவியிறக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி நீக்கம் தொடர்பாக சவால் விடுத்துள்ளதுடன், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தனது பதவியில் நிலைப்பேன் என்றும் கூறியுள்ளார்.