அடுத்த வாரம் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்?: அதிபர் சிறீசேனாவுடன்
01 Nov,2018
இலங்கை அரசியலில் நெருக்கடி நிலை நிலவி வருகிற சூழலில் அதிபர் சிறீசேனாவை அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா புதன்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தை கூட்ட சிறீசேனா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே கரு ஜெயசூர்யா சிறீசேனாவை புதன்கிழமை மாலை சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் வரை இச்சந்திப்பு நீடித்தது. அப்போது, நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை அவரிடம் ஜெயசூர்யா எடுத்து கூறினார் என்றும்
சிறீசேனா விரைவில் தனது முடிவை தெரிவிப்பதாகக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபட்சவை பிரதமராக நியமித்த பிறகு, நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை சிறீசேனா முடக்கினார்.
நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கரு ஜெயசூர்யா வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து சிறீசேனா நீக்கியது தொடர்பாக கரு ஜெயசூர்யா இலங்கை அட்டார்னி ஜெனரல் ஜெயந்த ஜெயசூர்யாவிடம் கேள்விகள் கேட்டிருந்தார்.
அதற்கு அவர் தனது பதில் பொருத்தமானதாக இருக்காது என்று கூறியிருந்தார். இதன்மூலம், அவர் சிறீசேனாவின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறுவதாக சில அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, அதிபர் சிறீசேனாவை ஐ.நா. தூதர் ஹனா சிங்கர் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக, ஹனா சிங்கர் இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, இலங்கையில் அரசமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாக அவரிடம் ஹனா சிங்கர் கூறினார்.
கொழும்பு கெஜட் செய்தி இணையதளத்தில் புதன்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசமைப்புச் சட்ட விதிகளை பின்பற்ற அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஹனா சிங்கரிடம் சிறீசேனா உறுதியளித்தார். இலங்கைக்கு ஐ.நா. அளித்துவரும் உதவிகளையும் சிறீசேனா நினைவுகூர்ந்தார். அதற்கு, எதிர்காலத்திலும் ஐ.நா. அமைப்பு இலங்கைக்கு உதவி புரிய தயாராக இருக்கிறது என்று சிங்கர் கூறினார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்: இதனிடையே, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்திவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (ஆர்எஸ்எஃப்) அமைப்பு பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபட்ச ஆதரவாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா வலியுறுத்தல்
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, தங்கள் பிரதமரை மக்கள் பிரதிநிதிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறீசேனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதை அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ தெரிவித்தார்.
விக்ரமசிங்கவை சட்டப்பூர்வமான பிரதமராக கருதுவதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெற்காசியாவுக்கான முன்னாள் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் தெரிவித்தார்.
நிதித் துறை பொறுப்பை ஏற்றார் ராஜபட்ச
இலங்கை நிதித் துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சராக ராஜபட்ச புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை 30 அமைச்சகங்களில் 12 அமைச்சகங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
ராஜபட்ச கூறுகையில், நான் அதிபர் பதவியிலிருந்தபோது நாட்டின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக இருந்தது. தற்போது வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாக குறைந்துள்ளது. விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் வரிகள் அதிகமாக இருந்தது என்றார்.