இரா.சம்பந்தன் எங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பார்
31 Oct,2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பாரெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென தாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருந்தது. அது தமது அரசாங்கத்திலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் தொடர்பிலான விலை சூத்திரம், இனிமேல் அமுல்படுத்தப்படாது எனத் தெரிவித்த அவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டமையானது தவறாகும் எனவும் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பை காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரணில் இந்நாட்டின் பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் நான்கு தடவைகள் பதவி வகித்திருக்கின்றார் என்பதால், அவரது பாதுகாப்பு முக்கியமானது எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.