இலங்கை புதிய பிரதமர்: வாழ்த்து தெரிவித்த சீனாவும், மெளனமாக இருக்கும் பிற நாடுகளும்
28 Oct,2018
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் ஞாயிறு காலை வரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. சமீபத்திய சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக கொழும்பில் உள்ள சுவிசர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், சீனத் தூதுவர் மட்டுமே இதுவரை உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றது குறித்து வெளிநாட்டுத் தூதவர்களைச் சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்துவார் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் நடந்துள்ள மாற்றம் குறித்த சர்வதேச நாடுகளின் எதிர்வினை என்ன என்பது குறித்து பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் நட்பு ரீதியான நாடுகள் கூட இன்னமும் எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லையே. அதற்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மகிந்த சமரசிங்க, ''புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. அதன்பின்னர் வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். அதுவரை பொறுத்திருப்போம்'' என்று கூறிக்கொண்டு வெளியேறினார்.
மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் ''நானே பிரதமர்'' என ரணில் விக்ரமசிங்க கூறிவருவதுடன், அலரி மாளிகையில் இருந்து வெளியேறவும் மறுத்து வருகிறார்.
வெளிநாட்டுத் தூதுவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சனியன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை நடத்தாமை, கொழும்பு துறைமுகத்தின் மேற்குக் கப்பல் தளத்தை இந்தியாவிற்கு தரும் பரிந்துரை நிராகரிக்கப்பட்டமை, பொருளாதாரத்தை வலுப்படுத்திய தவறியமை, ஆகிய காரணிகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமிக்க நேரிட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகள் வாழ்த்து தெரிவிப்பது வழமை என்றாலும், இலங்கையில் நடந்த மாற்றம் வழமைக்கு மாறானது என்பதால் சர்வதேச நாடுகள் இதனை உன்னிப்பாக அவதானித்தே தமது அறிக்கைகளை வெளியிடுவர் என பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் பிபிசி.க்குத் தெரிவித்தார்.