'இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள்
20 Oct,2018
இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன.
சமூக மற்றும் சமய ஒழுங்குகளையும் பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெராயின் விற்கப்படுகிறது.
கைது நடவடிக்கை
சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெராயின் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
மது வரி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் (காவல்துறை தலைமை கண்காணிப்பாளர்) என். சுஷாதரன் தலைமையிலான குழுவினர் இவர்களைக் கைது செய்தனர்.
இலங்கையின் மது வரித் திணைக்களத்தினுடைய வரலாற்றில், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மது சாரம் மற்றும் 'கோடா' (மதுசாரத்தை தயாரிப்பதற்கான பொருட்களின் சேர்வை) ஆகியவற்றை ஒரே முறை அதிகளவு கைப்பற்றியவர் சுஷாதரன்.
ஹிங்குரான வடிசாலையில், கல்லோயா பிளான்டேசன் நிறுவனத்தினர் அனுமதியின்றி உற்பத்தி செய்த 95 ஆயிரம் லிட்டர் மது சாரம், 5 லட்சம் லிட்டர் 'கோடா' ஆகியவற்றை சுஷாதரன் தலைமையிலான குழுவினர் 2017ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின்போது 13 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள். இந்த குற்றம் செய்த நிறுவனத்தினருக்கு நீதிமன்றம் 48 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
போருக்கு பின் போதைப்பொருட்கள் அதிகரிப்பு
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும் அதிகரித்துள்ளதாக சுஷாதரன் கூறுகின்றார்.
"போர் காலத்தில் இலங்கைப் படையினரும், விடுதலைப் புலிகளும் தரையிலும் கடலிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
அதனால், போதைப் பொருட்களை கடத்துவதும், இடம் மாற்றுவதும் கஷ்டமாக இருந்தது. ஆனால், போருக்கு பின்னர் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்து விட்டன.
இதனால், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தங்களது காரியங்களை இலகுவாக முடித்துவிடுகின்றனர்" என்று, பிபிசி தமிழிடம் சுஷாதரன் தெரிவித்தார்.
கடத்தலுக்கு உதவும் தொழில்நுட்பம்
"நவீன தொழில்நுட்பங்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மற்றும் ஈசி கேஷ் எனும் செல்பேசி மூலமான பணப்பரிமாற்ற வசதி போன்றவற்றினைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் மிகவும் எளிதாக நடத்தப்படுகின்றன".
"உதாரணமாக, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருளைக் கடத்துகின்றவர்கள், தமது போதைப் பொருள் அடங்கிய பொதியில் ஜி.பி.எஸ். கருவியை வைத்து கடலின் ஓரிடத்தில் போட்டு விட்டு, அது பற்றி இலங்கையில் அதனைப் பெற்றுக் கொள்ளும் தரப்பினருக்கு அறிவிக்கின்றனர்