முப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு
19 Oct,2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை மீள கையளிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என கடந்த வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதற்கமையவே இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 500 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அவற்றை பொதுமக்களுக்கு மீள கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை வடக்கில் 88 ஆயிரத்து 599 ஏக்கர் காணயும், கிழக்கில் 61 ஆயிரத்து 126 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகஇராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது வடக்கில் 11 ஆயிரத்து 557 ஏக்கர் காணியிலும், கிழக்கில் 3,225 ஏக்கர் காணியிலுமே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து சுட்டிக்காட்டினார்.
இந்த விவசாயக் காணிகளின் உரிமையாளர்கள் தற்போது உள்ளார்களா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.