இந்திய உளவுத்துறை மீது மைத்ரிபால சிறிசேன குற்றம் சாட்டினாரா? மறுக்கும் இலங்கை அரசு
17 Oct,2018
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை படுகொலை செய்ய இந்தியாவின் சர்வதேச உளவு அமைப்பான 'ரா' (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) திட்டமிட்டுள்ளதாக அதிபர் குறிப்பிட்டதாக வெளியான ஊடக தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது.
அக்டோபர் 16ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்திய உளவுத்துறையை குறிப்பிட்டு இலங்கை ஜனாதிபதி பேசியதாக உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இந்த மறுப்பு வந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதற்காக அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியரை குறிப்பிட்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக ஜனாதிபதி சிறிசேன கூறியதாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் அமைச்சர் ராஜித சேனரத்ன பிபிசியிடம் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்தியர், இந்திய உளவுத்துறையை சேர்ந்தவர் என்று ஜனாதிபதி கூறவில்லை என்று சேனரத்ன தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவையும் படுகொலை செய்யும் திட்டம் இருப்பதாக நமால் குமார என்ற காவல்துறைக்கு தகவல் அளிப்பவர் தெரிவித்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.
இந்த படுகொலை குற்றச்சாட்டில் துணை காவல்துறை தலைமை ஆய்வாளர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த துணை காவல்துறை தலைமை ஆய்வாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, முழு வீச்சில் புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வெளியிட்ட நமால் குமாரவை பலமுறை சந்தித்த இந்தியர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
நமால் குமார வெளியிட்ட படுகொலை சதித்திட்டத்திற்கான சான்றுகளை காவல்துறை இன்னும் கண்டறியவில்லை என்று தெரிவித்த ராஜித சேனரத்ன, புலானாய்வு தொடர்வதாக கூறியுள்ளார்.
புதன்கிழமை காலை இலங்கைக்கான இந்திய தூதர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோது, இந்த விடயங்கள் தெளிவாக கலந்துரையாடப்பட்டு, இருதரப்பு உறவு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் செய்தி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் ஜனாதிபதி சிறிசேன தொலைபேசியில் புதன்கிழமையன்று உரையாடியதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் அலுவலகமும் இது தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, தன்னையும் முன்னாள் பாதுகாப்பு செயலரையும் கொலை செய்ய இந்திய உளவு அமைப்பு திட்டமிடுவதாக தான் பேசியதாகக் கூறி ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என இந்தியப் பிரதமரிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமரை இலங்கையின் உண்மையான நண்பராகவும், தனிப்பட்ட முறையில் தனக்கு நெருங்கிய நண்பராகவும் பார்ப்பதாக ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த உடனடி நடவடிக்கையை பாராட்டிய இந்தியப் பிரதமர், அண்டை நாடுகளுடன் நல்லுறவுக்கு முன்னுரிமை என்ற தங்கள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்துபட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்த மேலும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் வலியுறுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்பில் ஜனாதிபதி - பிரதமரிடையே முரண்பாடு
இந்தியாவோடு இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வளர்தெடுக்கும் பிரதமர் ரணிலின் பரிந்துரை தொடர்பாக சூடான விவாதங்கள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் நடைபெற்றதாக பிபிசி சிங்கள சேவைக்கு தெரியவந்துள்ளது.
இந்தியாவோடு செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் ஆழ்கடல் துறைமுக முனையத்தை இலங்கை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியை வரும் 20ம் தேதி சனிக்கிழமை சந்திக்கவுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அகற்றிவிட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவோடு இணைந்து தற்காலிக அரசை அமைக்கும் நகர்வுகளை தொடர்ந்து நிகழும் முக்கிய விவகாரங்களுக்கு மத்தியில் இந்தியாவோடு நடைபெறும் இந்த உயர்நிலை இருதரப்பு சந்திப்பு வருகிறது.
பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடு, ஆளும் ரணிலின் யுஎன்பி கட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிடும்.
அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் ரணிலின் அரசு தோற்கடிக்கப்பட வேண்டும்.
போதை பொருள் தடுப்பு பிரிவால் அதிபரை கொலை செய்ய முயற்சி என்று குமார வெளியிட்ட விவகாரம், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முக்கிய இரு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள வலுவற்ற கூட்டணியில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்த சதித்திட்டம் தொடர்பான ஒலிப்பதிவில், பிரதமரோடு தொடர்புடைய நாட்டின் உயர் போலீஸ் அதிகாரியின் ஈடுபாடு இதில் இருப்பதாக குமார தெரிவிக்கிறார்.