தனி ஈழம் வேண்டாம், 1000.00 ரூபாய் அடிப்படைச் சம்பளமே வேண்டும்..
15 Oct,2018
தனி ஈழக் கோரிக்கையை, பெருந்தோட்ட மக்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக அதிகரிக்க, அரசாங்கத்தின் அழுத்தங்கள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
ராஜகிரியவில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரரையாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், கூட்டு ஒப்பந்தம் நேற்று (நேற்று முன்தினம்) நிறைவடைந்துள்ளது. தொடர்ச்சியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் பலனாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட மற்றைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டு வந்திருந்தாலும் 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்ற இலக்கு இன்னும் அடையப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதும் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் தொழிற்சங்கங்களின் பக்கத்திலிருந்தும் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரும் அழுத்தங்களைத் தொடர்ச்சியாக விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
கடந்த காலத்தில் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டிருந்ததால் தற்போது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், தீபாவளிக்கு முன்னர் இந்த இலக்கை அடைய முடிந்தால் மகிழ்ச்சி எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். அண்மையில் வரவு செலவுத்திட்டமும் வரவுள்ள நிலையில் அரசாங்கம் இந்த விவகாரத்தில் அவதானம் செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படும். எனவே 1000 ரூபாய் கிடைக்கும் வரையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடப்போவதில்லை. மேலும், கூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திடவும் தாம் தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்