இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
11 Oct,2018
எல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சுயாதின தேர்தல் ஆணைக்குழுவிற்கும், கட்சி தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து கட்சிகளும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
சுதந்திரக் கட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதாக எவர் குற்றஞ்சாட்டினாலும் அது அவர்களின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் சுதந்திரக் கட்சி தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்த்துள்ளது” என தெரிவித்துள்ளார்.