வனவளத் திணைக்கள அதிகாரிகள்ஸ முல்லைத்தீவில் அடாவடி
02 Oct,2018
வனவளத் திணைக்ளத்தின் காணி பறிக்கும் படலம் முல்லைத்தீவில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
100 ஏக்கர் தமிழர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரித்து எல்லையிட்டுள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக் காணி அபகரிப்பினால் 40 குடும்பங்களினதும் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளனர்.
முல்லைத்தீவு செம்மலை புளியமுனைப் பகுதியிலுள்ள மக்களது தோட்டக் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கொக்குத் தொடுவாய் முதன்மை வீதியின் மேற்குப் புறமாக உள்ள புளியமுனைப் பகுதியில் உள்ள சுமார் 720 ஏக்கர் காணிகள் 1972ஆம் ஆண்டுகளில் செம்மலையில் உள்ள 350 மக்களுக்குப் பயிர்ச்செய்கைக்கென அரசால் வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து அப் பகுதி மக்கள் அக் காணிகளில் வயல் வெள்ளாமையிலும்; கச்சான் சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டனர்.
போர்க்காலங்களில் அங்கு விவசாயங்கள் செய்ய முடியாத நிலை தோன்றியது.
எனினும் போரின் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக காணிகளின் ஒரு பகுதியை துப்புரவு செய்த மக்கள் மீண்டும் கச்சான் சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில் கடந்த வாரம் குறித்த பகுதிக்குச் சென்ற வன இலாக்காத் திணைக்களத்தினர் குறித்த காணிகள் வன வளத்துறைக்குச் சொந்தமானவை என தெரிவித்து காணிகளை அடையாளப்படுத்தி பெயர்ப் பலகை நாட்டியுள்ளனர்.
மேலும் காணிகளுக்குள் அத்துமீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் காணகளில் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாதுள்ளது எனவும் காணிகளை மீட்டுத் தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“உள் நாட்டுப் போர் காரணமாக விவசாயம் செய்ய முடியாது இருந்தது. பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக காணிகளுக்கான உறுதிப்படுத்தல் கோரப்பட்டது.
அத்துடன் முன்னர் விவசாயம் செய்த 350 குடும்பங்களில் 270 குடும்பங்கள் வரையில் காணிக் கச்சேரி ஊடாக காணிகள் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படத்தப்பட்டன.
ஆன்று முதல் 3 ஆண்டுகளாக நாங்கள் எமது காணிகளில் பயிரிட்டுள்ளோம். மீண்டும் இம் முறையும் பயிர்ச்செய்கை செய்ய எண்ணினோம். எனினும் வனவளத் திணைக்களத்தினர் எமது காணிகளுக்குச் செல் தடை விதித்துள்ளனர்.
சுமார் 100 ஏக்கர் காணிகளுக்கு இவ்வாறு அறிவித்தல்களை வனவளத்துறையினர் வழங்கியுள்ளனர்.
அத்து மீறிச்சென்றால் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
எமது வாழ்வாதார காணிகளே அவை. அவற்றை மீட்டுத்தர அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் து. ரவீகரன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உள்ளிட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்” என மக்கள் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக ரவீகரன்
“அவை மக்களுடைய காணிகள் தான் என்னால் உறுதியாக கூற முடியும். மக்கள் தங்களது காணிகளே அவை என்பதற்கான போமீட்களை என்னிடம் காட்டியுள்ளனர்.
சிலர் இன்று நாளை தருவதாக கூறியுள்ளனர். நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.
காணிகளில் கச்சான் பயிரிட்டதற்கான அடையாளங்கள் ஏராளம் உள்ளன. சிறிய பற்றைகள் வளர்ந்தவுடன் அது வன வளம் என்று கூறியே வன வளத்தினர் காணிகளுக்கு எல்லையிட்டுள்ளனர்.
வனவளத்தினருடைய இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். முல்லைத்தீவில் அவவர்களுடைய இராச்சியம் தான் நடக்கிறது.
முகாவலி எல் வலையத்தில் எங்கோ உள்ளவர்களை கொண்டு வந்து இங்கு குடியமர்த்த முடிகிறது என்றால் தமிழர்களுடைய சொந்தக் காணிகளை அவர்களுக்கு கொடுப்பதில் என்ன? பிரச்சினையிருக்கிறது என்ற எனக்குத் தெரியவில்லை.
அக் காணிகளுக்குச் சென்று பார்க்கமாறு பிரதேச செயலரைக் கோரியுள்ளேன்.
தமிழ்த் தலைவர்கள் இவ் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து மக்களுக்குச் சொந்தமான காணிகள் திட்டமிட்டு பறிக்கப்படுவது தொடர்பில் பேசி உரிய தீர்வு காணவேண்டும்.
இந்த மக்களை போன்று மேலமு; மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவதற்கு முன்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.