பிரபாகரன் உட்பட 47 பேரின் பட்டியலை தவிர்க்க ஜோர்தான் சென்றிருந்த மஹிந்த
01 Oct,2018
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட 47 புலிகள் இயக்க உறுப்பினர்களின் பட்டியலை அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக ஐ.நா. அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்திப்பதற்கு எடுத்த முயற்சியை தவிர்ப்பதற்காகவே இறுதி யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்கள் இருக்கையில் மஹிந்த ராஜபக் ஷ ஜோர்தானுக்கு விஜயம் செய்ததாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கடைசி இரண்டு வாரங்களில் அப்போதிருந்த ஜனாதிபதியோ பாதுகாப்புச் செயலாளரோ இராணுவத் தளபதியோ நாட்டில் இல்லையெனவும் அந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் கொழும்பின் மீது சென்னைப்பகுதியிலிருந்து வந்து விமானத் தாக்குதல் நடத்தவுள்ளதாக வெ ளியான தகவல்களை அடுத்து இவர்கள் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அப்போது தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் இலங்கையர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்துத் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகம் ஒன்றுக்கு கருத்த தெரிவிக்கையில்,
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது கடைசி சில தினங்கள் தான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெ ளிநாட்டுக்கு சென்றிருந்தாகவும் யுத்தம் முடிவடைந்தது தொடர்பாக உத்தியோகபூர்வமாக 2009ஆம் மே 19ஆம் திகதி தானே அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நான் மேற்படி தினங்களில் ஜீ -11 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜோர்தானின் அம்மான் நகருக்கு சென்றிருந்தேன். எவ்வாறாயினும் அந்த மாநாட்டிலிருந்து இடை நடுவில் நாடு திரும்பி யுத்தம் முடிவடைந்தமை தொடர்பில் அறிவித்தேன் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சில தினங்கள் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு சென்றமைக்கான புதிய காரணம் தற்போது வெ ளியாகியுள்ளது.
அன்றைய அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட 47 புலிகள் இயக்க உறுப்பினர்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா. சபை தீர்மானித்திருந்தது.
இதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டதுடன் அது குறித்த பேச்சுக்களும் நடைபெற்றிருந்தன. அன்றைய ஐ.நா. செயலாளர் பான் கீ மூனும் தெற்காசிய நாடுகளுக்கு பொறுப்பான அதிகாரி நம்பியாரும் இலங்கைக்கு விஜயம் செய்து இவ்விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாட எண்ணிருந்தனர்.
இந்தச் சந்திப்பை தவிர்ப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானுக்கு பயணித்திருந்தார். யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஐ.நா. சபையானது பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாகியிருந்தது. பெரும் இழப்பை தடுக்க முடியவில்லை என்று கருதி இருந்தது.
இதனால்தான் பிரபாகரன் உட்பட 47 பேரை காப்பாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது. இதனை தவிர்ப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானுக்கு விஜயம் செய்திருந்தார் என்று அந்த அமைச்சர் தகவல் வெ ளியிட்டுள்ளார்.