இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?
27 Sep,2018
இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை - மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.
யானை - மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால் சுடுதல், மின்சார தாக்குதல், உணவுப் பொருட்களுக்குள் வெடிகுண்டினை மறைத்து வைத்தல், நஞ்சூட்டப்பட்ட உணவை வைத்தல் மற்றும் பாரிய குழிகளுக்குள் விழ வைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம், யானைகள் கொல்லப்படுவதாக, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டம் - வெல்லாவெளி காரியாலய பொறுப்பாளர் ஏ. அப்துல் ஹலீம் கூறினார்.
யானையொன்றினை சட்டவிரோதமாக கொல்வது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான குற்றம் புரிகிறவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான தண்டம் ஆகிய இரண்டில் ஒன்றினை, அல்லது இரண்டினையும் நீதிமன்றம் விதிக்க முடியும்.
இலங்கையில் சுமார் 6 ஆயிரம் யானைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், யானை - மனித மோதல் அதிகம் காணப்படுகிறது.
பொதுமக்களின் வீடுகள், பயிர்களுக்கு சேதங்களை விளைவிக்கும் யானைகள், சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்று விடுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அம்பாறை மாவட்டம் கோமாரி பகுதியில் 4 பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி நல்லையா என்பவர், யானை தாக்கியதால் உயிரிழந்தார்.
வயலில் காவல் புரிவதற்காகச் சென்றிருந்த போது, மறைந்து நின்ற யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இவ்வாறு யானை தாக்கி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாயினை அரசாங்கம் வழங்கி வருகிறது. மரணச் சடங்கினை மேற்கொள்ளும் செலவுகளுக்காக மேற்படி தொகையில் 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படுகிறது.
இதேபோன்று, யானைகளால் வீடுகள் சேதமாக்கப்படும் போது, பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாயினை மாவட்ட செயலகம் ஊடாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வழங்குகிறது.
மறுபுறம், யானைகள் கொல்லப்படும் போது, அது தொடர்பில் போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக வனவிலங்குத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கிறது. யானை ஒன்று கொல்லப்பட்டதாக சந்தேகம் எழும்போது, குறித்த யானையின் உடல், நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது நடைமுறை.
இவ்வாறு உயிரிழக்கும் யானைகளின் உடல்களை அடக்கம் செய்யும் செலவுகளுக்கு, பிரதேச செயலகங்களுக்கு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.
இதேவேளை, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, இதுவரை 4,500 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குத் துறை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், 2,500 கி.மீ. நீளமுள்ள மின்சார வேலி அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். மின்சார வேலிகளை அமைத்துப் பராமரிப்பதற்காக, 5 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிராமங்களுக்குள் அரசே யானைகளை விடுகிறதா?
இதேவேளை, தமது கிராமங்களுக்குள் யானைகளை அரசாங்கமே கொண்டு வந்து விடுவதாக, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய பொறுப்பதிகாரி ஹலீமிடம் கேட்டபோது; "அந்தக் குற்றச்சாட்டு தவறானது" என்றார்.
"சில பிரதேசங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் சில யானைகளை நாம் அடையாளம் கண்டால், அவற்றைப்பிடித்து, அனுராதபுரம் - ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் அவ்வாறான யானைகளை விடுவதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கொண்டு செல்வோம்.
இவ்வாறான யானைகளை இரவு வேளைகளில் வாகனங்களிலேயே கொண்டு செல்வது வழமையாகும். அதனைக் காணும் மக்கள், அவர்களின் கிராமங்களில் விடுவதற்காகவே யானைகளை நாம் கொண்டு வருவதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அதில் எவ்வித உண்மையும் இல்லை" எனக் கூறினார்.
"சிலவேளைகளில், ஒரு சரணாலயத்திலுள்ள யானைகளை, இன்னொரு சரணாலயத்தில் விடுவதற்காகவும் கொண்டுசெல்வோம். இதனைக் காணும்போதும், அவற்றை ஏதோவொரு கிராமத்துக்குள் நாங்கள் கொண்டு விடப்போகிறோம் என, சிலர் தவறாக புரிந்து கொள்ளக் கூடும்" என்று அவர் விவரித்தார்.