த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திர வதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப் பட்டமை தொடர்பில் முன்னாள் இராணு வத் தளபதி சரத் பொன்சேகாவிடம் சி.ஐ.டி. நேற்று விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றது.
நேற்று நண்பகல் 12.00 மணிக்கு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலமையகத்தில் ஆஜராகிய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் மாலை 4.00 மணி வரை நான்கு மணி நேரம் விசாரணை செய்து விஷேட வாக்கு மூலம் பதிவு செய்துகொண்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் வந்திருந்த பொன்சேகாவிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. , கீத் நொயார் விவகாரத்தில் அவரிடம் பெறப்படும் இரண்டாவது வாககு மூலம் இதுவாகும்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.ஏ.திசேராவின் ஆலோசனைக்கு அமைவாக குற்றப் புலனாயவுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் சரத் பொன்சேகாவிடம் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கீத் நொயார் விவகாரத்தில், 8 ஆவது சந்தேக நபரான முன்னாள் இராணுவ புலனாயவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர சி.ஐ.டி.க்கு கொடுத்த இறுதி வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விஷேடமாக மறைமுக பொறுப்புக் கூறல் காரணிகள் குறித்து இவ்விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும், அதன்படி அமல் கருணாசேகர - முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ஆகிய இருவரும் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி இவ்விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த 2008 மே மாதம் 22 ஆம் திகதி கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார். அந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்ளியூ.புளத்வத்த, எஸ்.ஏ.ஹேமசந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜயசூரிய, மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர ஆகியோர் கைதாகி பிணையில் உள்ளனர்.