மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போது யார் குரல் கொடுத்தது?
20 Sep,2018
பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போது யார் குரல் கொடுத்தது? அப்போது அமைதியாக இருந்தவர்களுக்கு தற்போது ஜனாதிபதியின் மீது ஏன் இவ்வளவு அக்கறை ஏற்பட்டுள்ளது?
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இரகசிய தகவல்கள் எதனையும் எம்மால் வெளியிட முடியாது.
விசாரணை முடிந்த பின்னரே உறுதியான தகவல்களை கூற முடியும். ஆகவே இந்த விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் வலியுறுத்தினார்.
அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அச்சுறுத்தல் இருப்பின் பாதுகாப்பு வழங்குமாறு கோர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கூட்டு எதிரணி பாராளுமன்ற குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்வியை அடுத்து எழுந்த சர்ச்சையின் போது பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தினேஷ் குணவர்தனவின் கேள்வியை அடுத்து எழுந்த சர்ச்சையின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டாரவே பதில் வழங்கினார். இதன்போது சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருந்தபோதும் எழுந்து பதிலளிக்க முன்வரவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் எழுந்த கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி கூறும்போது, பாராளுமன்றத்தில் வேறு கேள்விகள் எழுப்பப்படும் போது பொலிஸ் மா அதிபரை போன்று கிண்டலடித்து கொண்டு பதிலளிக்கும் பிரதமர் ,பெரும் பாராதூரமான பிரச்சினை தொடர்பில் தற்போது கேள்வி எழுப்பும் போது எழுந்து பதிலளிக்காமல் அமைதியாக சபையில் வீட்டிருக்கின்றார். ஏன் பதிலளிக்காமல் உள்ளார் என்றார்.
இதனையடுத்து எழுந்து பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான வெளிவந்த தகவல்கள் தொடர்பில் தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான பாரதூரமான விசாரணையொன்றை முன்னெடுக்கும் போது அது தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது. இரகசிய தகவல்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது. சாட்சியங்களை பாதுகாக்க வேண்டும்.
எனவே தற்போது குற்றபுலனாய்வு பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மீது அக்கறை கொண்டு தினேஷ் குணவர்தன இந்த கேள்வியை எழுப்பியமை குறித்து நான் சந்தோஷப்படுகின்றேன். எனினும் ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கிய போது அவரது பாதுகாப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
அப்போது இங்கிருந்தவர்களில் யார் குரல் கொடுத்தனர். அப்போது குரல் கொடுக்காதவர்கள் தற்போது ஜனாதிபதியின் மீது ஏன் இவ்வளவு அக்கறை செலுத்துகின்றனர். அதனை நினைக்கும் போது ஆச்சரியமாகவே உள்ளது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பில் நாம் அக்கறை கொண்டுள்ளோம். அவருக்கான பாதுகாப்புகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரினால் அவருக்கான பாதுகாப்புகள் வழங்கப்படும்.
இந்த சபையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் பேச ஆரம்பித்தவர்கள் தற்போது பொலிஸ் மா அதிபர் வரை வந்துள்ளனர். பொலிஸ் மா அதிபரிடம் குறைப்பாடுகள் இருக்கலாம். இந்த சம்பவத்தில் அவரது வகிபாகத்தில் தொடர்பு உள்ளதா என்பது இறுதியில் தெரியவரும்.
எவ்வாறாயினும் இது தொடர்பான விசாரணைகளை செய்யுமாறு ஜனாதிபதி, சட்டமா அதிபர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். நானும் வெளிநாட்டில் இருந்து வந்த கையோடு பொலிஸ் மா அதிபரிடம அறிக்கை கோரியுள்ளேன். ஆகவே எம்மால் தற்போது ஒன்றும் கூற முடியாது. விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே எதனையும் கூற முடியும் என்றார்.