சரணடைந்த புலிகள் கொல்லப்படவில்லை : முன்னாள் அமைச்சரின் கருத்து பாரதூரமானது
20 Sep,2018
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்திருப்பதை முற்றாக நிராகரிக்கின்றேன்.
பிரபாகரனின் தாய், தந்தை இருவரும் சரணடைந்ததால் அதுதொடர்பான பொறுப்பை நாங்கள் நிறைவேற்றினோம் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஊடகப்பேச்சாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
யுத்தத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர் மிகவும் மனிதாபிமானத்துடனேயே செற்பட்டனர். அவர்கள் பொதுமக்களை இலக்குவைத்து யுத்தம் செய்யவில்லை.
இதுதொடர்பாக நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளிப்படையாவே தெரிவித்திருக்கின்றோம். யுத்தத்தின்போது பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு எமது ராணுவத்தினர் இருக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம்.
இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் தொடர்பில் நாங்கள் பொறுப்புடன் செயற்பட்டோம்.
ஆனால் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக எமது கட்சியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருப்பதை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். பிரபாகரனின் தாயும் தந்தையும் சரணடைந்திருந்தனர். அவர்கள் விடயத்தில் நாங்கள் பொறுப்புடன் செயற்பட்டோம்.
தயாமாஸ்டர் விடுதலை புலிகளுடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். ஆனால் அவர் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தார். அதனால்தான் அவர் இன்னும் உயிருடன் இருக்கின்றார்.
அத்துடன் அவர் தற்போது வெளிப்படையாக செயற்பட்டு வருகின்றார். அதேபோன்று புலிகளுடன் இருந்து சரணடைந்த 12ஆயிரம் பேரை முறையாக பதிவுசெய்து, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுத்தோம். தற்போது அவர்கள் சாதாரண மக்களுடன் இணைந்து வாழும் நிலைக்கு நாங்கள் அவர்களை மாற்றியமைத்திருக்கின்றோம்.
யுத்தம் ஒன்று இடம்பெறும்போது இரண்டு தரப்பிலும் மரணித்திருப்பார்கள். அதுசாதாரண விடயம். அதற்காக சரணடைந்தவர்களை கொலைசெய்யும் அளவுக்கு இராணுவம் செயற்படவில்லை என்பதை நாங்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றோம்.
சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களை இராணுவத்தினர் கொலைசெய்ததாக இப்போது தெரிவிக்கின்றவர்கள் அந்த காலத்தில் ஏன் இதனை தெரிவிக்காமல் மறைத்தனர் என்று கேட்கின்றேன். இதனால் இந்த பிரசாரமானது மிகவும் பயங்கமானதாகும். அதனால் இதுதொடர்பில் எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் எடுக்கலாம் என்றார்.