இலங்கையில் இரகசிய முகாம்; ஒப்புக்கொண்டார் இராணுவப் புலனாய்வு முன்னாள் பணிப்பாளர்!
29 Aug,2018
படுவத்தை இரகசிய முகாம் – ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர
கம்பகா- படுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது தமக்குத் தெரியும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஒப்புக் கொண்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் தகவல்களை வெளியிட மறுத்து வருவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் சார்பில் முன்னிலையான சட்டவாளர் ஷெகான் சில்வா, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடமான – கம்பகா பதுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது பற்றி தமது கட்சிக்காரருக்குத் தெரியும் என்று கூறினார்.
இதன்போது அரச சட்டவாளர் லக்மின் கிரிஹகம முன்னிலையாகி, அமல் கருணாசேகர தகவல்களை மறைத்து, முக்கியமான இராணுவ இரகசியங்களை கண்டறியும் சூழலை உருவாக்கி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் முதல் சந்தேக நபரான மேஜர் புலத்வத்த, அளித்துள்ள சாட்சியத்தில், இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வழிகாட்டலின் படியே படுவத்த இரகசிய முகாம் பேணப்பட்டது என்று வெளிப்படுத்தியுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில், மருதானை திரிபொலி முகாமில் பணியாற்றிய மேஜர் அன்சாரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அதில், தொம்பே இரகசிய முகாம் தொடர்பாக அவர் அனைத்து விபரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அரச சட்டவாளர் கிரிஹகம தெரிவித்தார்.
இதையடுத்து, சட்டவாளர் ஷெகான் சில்வாவிடம், வழங்கிய தகவல்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம், வாக்குமூலம் பெறும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன், செப்ரெம்பர் 10ஆம் நாள் வரை மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.