12 வீத காணிகளே விடுவிக்கப்படவுள்ளன- ஜனாதிபதி
22 Aug,2018
2009 ஆண்டில் இருந்து இன்று வரையான காலப் பகுதியில் 88 வீதமான காணிகள் மக்களுடைய பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 12 வீதமான காணிகளே விடுவிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ். மயிலிட்டி இறங்குதுறையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான வேலைத் திட்டத்தை இன்றையதினம் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த 3 வருடங்களாக இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளோம். அது போன்று மேலதிக செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக நாங்கள் பெரும் தொகையான பணத்தினை ஒதுக்கியுள்ளோம். அதேபோன்று இவ் வரவு செலவு திட்டத்தின் ஊடாகவும் நாங்கள் குறித்த மாகாண சபைகளுக்கு மிக கூடிய தொகையினை ஒதுக்கியுள்ளோம்.
இருப்பினும் அபிவிருத்திகளின் வேகம் போதாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். என்னைப் போல், எந்த ஒரு ஜனாதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து சென்றது இல்லை. நான் 3 மாதத்திற்கு ஒரு தடவை வந்து செல்கிறேன்.
மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான நிவராணங்களை அறிந்து கொள்வதற்காக நான் இங்கு வருகின்றேன்.
இங்கு 2009 ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 88 வீதமான காணிகள் மக்களுடைய பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 வீதமான காணிகள் விடுவிக்கப்பட உள்ளது. எங்களுடைய நாடு தீவகப் பகுதியை மையமாக கொண்டு காணப்படுகின்றது. அதற்கு இணைவாக போதைப் பொருட்களும் காணப்படுகின்றது.
இவ்வாறான போதைப் பொருட்களை தடுப்பதற்கு நாங்கள் முற்றாக குரல் கொடுக்கிறோம். அதிலிருந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை முற்றாக விடுவிக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பொருட்கள் சம்பந்தமான விடயத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனம் காணப்பட்டால் மரண தண்டணை வழங்கப்படும் என நான் கூறியுள்ளேன்.
எந்த ஒரு போதைப் பொருளை வைத்திருந்தாலும் நாங்கள் மரண தண்டனை வழங்குவோம்.
எனவே நான் நினைக்கவில்லை இவ்வாறான பிரச்சினைகள் 24 மணித்தியாலத்தில் இல்லாது ஒழிக்கப்படும் என்று, இது 5 வருடங்கள் அல்லது 10 வருடங்களில் தான் இல்லாது ஒழியும்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதார கொள்கைக்கு இவ்வாறான விடையத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து நாட்டினை வேறு ஒரு பாதைக்காக பயணிக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.