புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு
08 Aug,2018
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.
இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக மேற்கில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது?," என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் டயஸ்போராக்களுக்கிடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இனங்கண்டு, அவற்றை களைவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி செய்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.
"நாட்டை விட்டுச் சென்று வேறு நாடுகளில் வாழ்பவர்களையே நாம் டயஸ்போரா என அழைக்கின்றோம்.இவர்கள் வெளிநாடுகளில் இருந்தபடி எமது நாட்டின் சமூகத்தினர் மற்றும் ஆட்சியில் பாரிய பங்களிப்பு செலுத்தி வருகின்றனர். பல நாடுகளில் வாழ்ந்து வரும் இவர்களின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர்கள் சிறுபான்மையைச் சேர்ந்தவராகவோ அல்லது பெரும்பான்மையைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றன. இதில் நாட்டுக்கு பயனளிக்க கூடியதனை கண்டறிந்து அதனை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இராணுவத்திடமே உள்ளது," என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மக்களுக்காக எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நடத்தப்படவுள்ள கொழும்பு செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் மேற்படி ஆர்வம் மற்றும் விருப்பத்தை வெளிநாட்டுப் பிதிநிதிகள் மூலம் அந்நாட்டில் வாழும் டயஸ்போராவிடம் கொண்டு சேர்ப்பதே இலங்கை இராணுவத்தின் விருப்பமென்றும் அவர் கூறினார்.
மேலும் இக்கருத்தரங்கில் அரசியல் அடிப்படைவாதம் எவ்வாறு இராணுவத்தினர் மீது அழுத்தம் வழங்குகிறது, மற்றும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.
நாட்டின் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்குமென்றும் இதன்போது இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இச்செயலமர்வுக்கு முன்னொருபோதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து பெரும் திரளான இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் நால்வர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர். அதேபோன்று சீனாவிலிருந்தும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வரென்றும் அவர் கூறினார்.
இராணுவத்தினர் பாரம்பரியமாக யுத்தம் செய்து வந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. தற்போது ஆளுமையை கட்டியெழுப்பும் இராணுவமே இலங்கையில் உள்ளனர். எந்தவொரு இயற்கை அனர்த்தத்தின்போதும் இராணுவத்தினரே முதலில் களத்தில் இறக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் செய்திகளை வெளிநாடுகளுக்கு இராஜதந்திர ரீதியில் கொண்டு செல்வதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமென்றும் அவர் குறிப்பிட்டார்.