கோழைகளாக இருந்திருந்தால், காத்தான்குடியை புலிகளிடம் இழந்திருப்போம் -ஹிஸ்புல்லா
04 Aug,2018
முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“ புலிகளால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது. இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், இந்தளவு மோசமான – அகோரமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் தலைவர் மர்ஹும் அஷ்ரப் சேர் தலைமையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறிபால ஆர்டிகல உள்ளிட்ட அரசியல் உயர் மட்டத்தில் அடிக்கடி பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருவாரத்தின் ஏறாவூரிலும் படு மோசமான பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த ஷுஹதாக்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகவோ எம்மால் முழு கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் பாதுகாக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு விரட்டியடித்தார்களோ அதே போன்று கிழக்கிலிருந்தும் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம்களை அடித்து விரட்ட கடும் முயற்சிகளை செய்தனர்.
விடுதலைப் புலிகளின் அந்த கடுமையான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு பள்ளிவாசல் படுகொலைச் சம்பவங்கள் பெரும் தாக்கம் செலுத்தியது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய தேவை – உணர்வு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
காத்தான்குடி படுகொலை சம்பவத்தில் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் வழங்கியது. இராணுவ முகாம்களை கோரினோம் வழங்கினார்கள், காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரினோம் அமைத்தார்கள், ஆயுதம் கோரினோம் வழங்கினார்கள்.
ஷுஹதாக்கள் படுகொலை சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம். இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஷுஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள். எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். இன்று நாங்கள் எமது பிரதேசத்தை கிழக்கு மாகாணத்தில் முக்கிய பிரதேசமாக அபிவிருத்தி செய்துள்ளோம்.
காத்தான்குடி படுகொலைக்கு பின்னர் மிகவும் அச்சுறுத்தலான சூழலில் எனது இருப்பிடத்தை மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அச்சுறுத்தல்களுக்கு பயந்து காத்தான்குடியை விட்டு வெளியேற பலர் தயாரானார்கள். அப்போது நாங்கள் யாரையும் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மரணித்தாலும் இந்த மண்ணிலே தான் மரணிக்க வேண்டுமே தவிர யாரும் வெளியேற முடியாது என கூறினோம். எனது இத்தீர்மானம் சமூக ரீதியாக எனக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
எனினும், நாங்கள் அன்று ஊரை விட்டு போக அனுமதித்திருந்தால் இன்று கத்தான்குடி என்ற மண் இருந்திருக்காது. எவ்வாறு வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களை நாங்கள் இழந்தோமோ அது போன்று கிழக்கிலும் இழந்திருப்போம்.
அன்று ஆயுத ரீதியான பங்கரவாதத்தை நாங்கள் முகம்கொடுத்தோம். இன்று அரச அதிகாரிகளின் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் அவர்களை குடியேற்ற முடியாத அளவுக்கு தடையாக அரச அதிகாரிகள் செயற்படுகின்றனர். இதனை முறியடிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல.
தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழ் மக்களும் - முஸ்லிம் மக்களும் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற போது மாத்திரமே வடகிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.
வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும். மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
தமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு – அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும். – என்றார்.