மஹிந்தவின் போராட்டத்தின் பின்னணியில் சீனா:
04 Aug,2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் முன் னெடுக்கப்பட்ட பேரணி உட்பட வேலைநிறுத்தப் போராட் டங்களுக்கு நிதி அனுசரணை சீனாவே வழங்குகிறது. நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக் கவே சீனா இவ்வாறு செயற்படுகின்றது. எமது நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என சீனாவிடம் நான் சிரம்தாழ்த்தி வேண்டுகின்றேன் என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் பொன்சேகாவுக்கு அருகில் இருந்த பாதாள உலகக் கோஷ்டி ஒருவரை கைது செய்ததை போன்று ஏனைய அமைச்சர்களின் பதாள உலகக் கோஷ்டியினரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் சரத் பொன்சேகா அருகில் இருந்த பாதாள கோஷ்டியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனை நாம் பாராட்ட வேண்டும். இதற்காக பாடுபட்ட அதிகாரிகளை பாராட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு இலங்கையில் நடப்பதில்லை. வெளிநாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் அதிகாரிகளை தலையில் தூக்கி வைத்திருப்பர். ஆனால் இங்கு அப்படி நடப்பதில்லை. விசேட அதிரடி படையின் கட்டளை தளபதி லத்தீப்பை நாம் பாராட்ட வேண்டும். அவர் மிகவும் துணிச்சலாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். திருடர்களை தைரியம் ஊட்டிவிட்டு திருடர்களை பிடித்தவர்களை இழிவாக கருதுவதே எமது நாட்டில் வழக்கமாக மாறிவிட்டது.
அத்துடன் இவ்வாறான நிலைமை முன்னைய ஆட்சியின் போது நடக்கவில்லை. முன்னைய ஆட்சியின் போது பாதாள உலகக் கோஷ்டி தலைவர்களை மஹிந்த ராஜபக்ஷ பாதுகாத்தே செயற்பட்டார். ஆனால் நல்லாட்சி அவ்வாறில்லை. எமது அரசாங்கத்தின் பிரபல அமைச்சரான சரத் பொன்சேகாவின் பாதாள உலக கோஷ்டி தலைவரையே கைது செய்து விட்டோம். ஆகவே நாட்டில் தற்போது நல்லாட்சி இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் பின்னணியில் சீனாவே உள்ளது. போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு மஹிந்த அணியினருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது. ஆகவே மஹிந்த அணியினர் பேரணிக்கும் நாட்டில் நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டங்களுக்கும் சீனாவே நிதி வழங்குகின்றது.
இலங்கையில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தவே சீனா இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. சீனா விவகாரத்தில் கழுத்து நசுக்கப்பட்ட நிலைமையிலேயே நாம் உள்ளோம். எமது நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என சீனாவிடம் நான் சிரம்தாழ்த்தி வேண்டுகின்றேன்.
அத்துடன் பாதெனிய தலைமையிலான வைத்தியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆகவே வைத்தியர்களின் வேலைநிறுத்ததினால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையெனில் வைத்தியர்களுக்கு எதிராக போராடுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளேன் என்றார்