சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொள்வனவு?
24 Jul,2018
சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் இருந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் இயங்கும், அரசுத் துறை நிறுவனமான, பாக்கொக் டொக் நிறுவனத்திடம் இருந்தே ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
பாங்கொக் டொக் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று, கடந்த 13ஆம் நாள் .சிறிலங்கா கடற்படைக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவதற்கான தமது திட்ட முன்மொழிவையும், அது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையையும் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவிடம் கையளித்துள்ளது.
அத்துடன், இது தொடர்பாக இருதரப்புக்களுக்கும் இடையில் விரிவான பேச்சுக்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்புகளில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
1865ஆம் ஆண்டு தொடக்கம் கப்பல்களைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பாங்கொக் டொக் நிறுவனம், அண்மையில் பிரித்தானியக் கடற்படைக்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கட்டிக் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது