தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சம்பந்தனை அழைத்தார் மகிந்த
23 Jul,2018
தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
சீன இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில், நேற்று மாலை வரவேற்பு விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன பிரதம விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில், மகிந்த ராஜாபக்ச, இரா.சம்பந்தன், கோத்தாபய ராஜபக்ச, ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன், கோத்தாபய ராஜபக்ச, சீனத் தூதுவர் செங் ஷியுவான், கபில வைத்தியரத்ன உள்ளிட்டோர் அருகருகே அமர்ந்திருந்து நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.
குறிப்பாக, மகிந்த ராஜபக்சவும், இரா.சம்பந்தனும், கோத்தாபய ராஜபக்ச அருகில் இருக்கும் போது, தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர்.இந்தச் சந்திப்பு குறித்து யாழ்ப்பாண நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச-
“சம்பந்தனிடம் விரிவான பேச்சுக்களை நடத்தினேன். எனது ஆட்சியின் போது சீனாவிடம் அதிக கன்களை பெற்று , நாட்டை கடன்சுமைக்குள் தள்ளி விட்டதாக, தற்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்து அவரும் குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே அதிக கடனை பெற்றேன், இப்போது அந்த அபிவிருத்தியும் தடைப்பட்டு விட்டது, இதனை சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள் என்று அவரிடம் கூறினேன்.
நாம் அதிகாரத்துக்கு வந்ததும், எங்களுடன் பேசித் தீர்க்க நீங்கள் முன்வர வேண்டும். எங்களுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும். வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், தமிழ் மக்களைத் தவறான பாதைக்கு கொண்டு சென்றால், உங்கள் மத்தியில் புதிய புதிய அரசியல் சக்திகள் உருவாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அவருக்கு விளக்கினேன்.
பின்னர் அதனால் கவலைப்பட வேண்டியிருக்கும் என்றும் அவருக்கு கூறினேன்.
சம்பந்தனையும் கோத்தாபய ராஜபக்சவையும் அருகருகே அமர்த்திப் பேசி, இணக்கப்பாடான சூழலுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் தாம் நீண்ட நேரம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியதாக இரா.சம்பந்தனும், யாழ். நாளிதழிடம் உறுதிப்படுத்தியுள்ளார்