இராணுவ வீரனாக புகழ்பெற்று மீன் வியாபாரியாக மாறியநபர்!!
15 Jul,2018
யுத்தத்தின்போது பெரும் வீரர்களாகவும் தனவந்தர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பலரது வாழ்க்கை இன்று யுத்தம் முடிந்தகையோடு புரட்டிப்போடப்பட்டுள்ளது.
அந்தவகையில் யுத்தகாலத்தில் பெரும் யுத்த வீரராக பலராலும் போற்றப்பட்ட சாரங்க என்ற நபர் தற்பொழுது மீன் வியாபாரியாக உலா வருகிறார்.
யுத்த வெற்றியின் ஒன்பது வருடகால கொண்டாட்டங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வெற்றிக்கு தன் உயிரைப் பணயம் வைத்து யுத்தக் களத்தில் போரிட்ட இராணுவத்தினரில் முக்கியமானவர் இராணுவவீரர் சாரங்க. அவர் இன்று கலேவெல மாத்தளை சந்தியில் மீன் வியாபாரியாக தனது ஜீவனோபாயத்தை கொண்டுசெல்கிறார்.
2004 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சாரங்க 6 மாத கால ஆரம்ப இராணுவ பயிற்சியை பூஸா இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் பெற்றுள்ளார்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு 800 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் வெற்றிகரமாக இராணுவப் பயிற்சியை முடித்த 138 பேரில் ஒருவராக சாரங்கவும் வெளியேறினார்.
தனது இராணுவ வாழ்க்கைப் பயணத்தை தொப்பிகலை தாக்குதலில் முதல் முதலாக ஆரம்பித்தார்.
தொப்பிகலையை மீட்கும் இலங்கை இராணுவத்தின் விடுதலைப்புலிகளுடனான போரில் திறமையாக போரிட்ட இராணுவ வீரராகத் திகழ்ந்த சாரங்க அந்த தாக்குதல் நடவடிக்கைக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட 8 பேர் அடங்கிய சிறப்பு கொமாண்டோ படையணியிலும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
சிறுவயது முதல் சுறுசுறுப்பையும் துடிப்பான ஆற்றலையும் கொண்டிருந்த சாரங்கவிற்கு இராணுவ செயற்பாடுகள் இலகுவானதாக இருந்தன.
அவரது துடிப்பு மிக்க ஆற்றலும் திறமையும் இராணுத்தில் இவர் பால் நம்பிக்கை ஏற்பட காரணியாக அமைந்தது.
இவ்வாறான நிலையில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரின் உச்சக்கட்டமும் இறுதிக்கட்டமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் சமரில் தன் உயிரை துச்சமென மதித்து அனைத்து தாக்குதல் முன்னகர்வுகளின் போதும் முன்வரிசை வீரராக இருந்து போரிட்டார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவ வீரர்களை பாராட்டுவதற்கும் கௌரவிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் அநேகமானவற்றில் சாரங்கவின் புகைப்படங்களே இடம்பெற்றிருந்தன. காரணம் அவரது கம்பீரமான உடல் கட்டமைப்பாகும்.
உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாட்டு ஊடகங்களிலும் கூட சாரங்கவின் புகைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. அதே போல் உள்நாட்டில் இராணுவ வீரர்களை வாழ்த்துவதற்காக வீதியோரங்களில் வைக்கப்பட்ட பதாகைகள் அநேகமானவற்றில் சாரங்க இடம்பிடித்திருந்தார்.
இந்தப் பிரசாரமே சாரங்கவிற்கு வினையாகவும், இராணுவத்தின் மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட காரணியாகவும் அமைந்தது. காரணம் சாரங்கவின் புகைப்படங்கள் சமூகத்தில் அநேகமான பிரதேசங்களில் பிரபலமான நேரம் முதல் சாரங்கவிற்கு இராணுவ உயர் அதிகாரிகளிடமிருந்து அழுத்தங்கள் அதிகரித்தன. இவ்வாறான நிலையில் சாரங்க இராணுவ தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு தனக்கு பொருத்தமற்ற வேலைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இவ்வாறான நிலை மேலும் உக்கிரமடைய ஆரம்பித்ததை அடுத்து சாரங்கவிற்கு இராணுவத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது. தான் நாட்டுக்காக தன் உயிரை துச்சமென மதித்து செயற்பட்டமைக்கு கிடைத்த கெளரவமென மன உளைச்சல் அடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றார்.
பின்னர் தான் ஓர் இராணுவ வீரர் என அடையாயப்படுத்திக் கொண்டு பல நிறுவனங்களுக்கு தொழில் தேடி சென்றும் எவரும் அவருக்கு தொழில் வழங்க முன்வரவில்லை.
இந்நிலையில், தன் சேமிப்பில் இருந்த சிறிய தொகையைக் கொண்டு மீன் வியாபாரத்தை ஆரம்பித்து இன்று கலேவெல பிரதேசத்திற்கே மீன் மொத்த வியாபாரியாக மாறி தனது மனைவியின் துணையுடன் செயற்பட்டு வருகின்றார்