எல்லையை மீறினால் விக்கி மீது சட்டம் பாயும்!
14 Jul,2018
-
இராணுவத்தினர் கோருகின்ற தகவல்களை அரச அதிகாரிகள் தனது அனுமதியின்றி வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, மின்சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
'அரசியல் செயற்பாட்டில் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. பல்வேறு சிந்தனை கொண்டவர்கள் இருக்கின்றனர். சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர். இன்னும் சிலர் சூடு நடத்துகின்றனர். மேலும் சிலர் பேரூந்துகளை எரியூட்டுகின்றனர். சிலர் கழுத்தை வெட்டுகின்றனர். அரசியலில் பல்வேறு நபர்களும் பலவற்றை தெரிவுசெய்கின்றனர்.
எனவே எதிவரும் நாட்களில் தேர்தல் நெருங்கிவருகின்ற காரணத்தினால் விக்னேஸ்வரன் அதற்கான ஆயத்தங்களையே மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு அரசியல் பழக்கமில்லாத காரணத்தினால் சில விடயங்களை அப்படியே கூறிவிடுகின்றார். எனவே இந்த நாட்டில் ஒரே அரசுதான் இருக்கிறதே தவிர சமஸ்டி ஆட்சியில்லை. இந்த நாடு ஒற்றையாட்சி கொண்டது. அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் உத்தரவுகளுக்கு அமைய கடமையாற்றும் இராணுவம் இருக்கின்றது. அதனால் இந்த நாட்டின் சட்டமானது விக்னேஸ்வரனுக்கும் அதேபோல உங்களுக்கும், எல்லாருக்கும் பொதுவானதாகும்.
விக்னேஸ்வரன் சட்டத்திற்கு எதிராக செயற்படுகின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே சட்டம் தன் கடமையை செய்யும். அவருக்கு இந்த நாட்டின் பேச்சு சுதந்திரத்திற்கமைய பேசுகின்ற விடயங்களால் குற்றமாகிவிடாது. அந்த எல்லையை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அவருக்கெதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.