டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் விக்கியின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!
29 Jun,2018
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரனை, பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி. டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.