மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிக்கிறார் மஹிந்த! - சரத் பொன்சேகா
27 Jun,2018
தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். களனி பிரதேசத்தில இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1949 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் எமது நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவினையே எதிர்கொண்டு வருகின்றது . கடந்த அரசாங்கத்தின் முறையற்ற அரசியல் கொள்கையின் காரணமாக பாரிய கடன் சுமைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை தோற்றம் பெற்றது. இதன் பிரதிபலனையே தற்போது தேசிய அரசாங்கம் அனுபவித்து வருகின்றது.
இந் நிலையில் தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் குடும்ப ஆட்சியினை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றியிருந்தால் இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் ஆதரவு தேசிய அரசாங்கத்திற்கே கிடைக்கப் பெற்றிருக்கும். ஆனால் மக்கள் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் விதமாகவே வாக்குகளை பயன்படுத்தினர். எனவே தேசிய அரசாங்கத்தில் காணப்படுகின்ற அடிப்படை குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துக் கொண்டு 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுப்போம் என்றார்.