இது நல்லாட்சி அல்ல அமைச்சர்! மங்கள சமரவீர
24 Jun,2018
குற்றவாளிகள் விடயத்திலும் சட்டம் மற்றும் நீதி முறையாக பின்பற்றப்பட வேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் வைத்து கைதுசெய்யப்பட்ட கொள்ளைக் கும்பலொன்றின் உறுப்பினர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாத்தறையில் நேற்றுமுன்தினம் நகை கடையொன்றை கொள்ளையிட்ட குழுவிற்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பொதுமக்களும் காயமடைந்திருந்ததுடன், சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தை வெற்றிகரமான முறியடித்த பொலிஸார் நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்திருந்த போதிலும் பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித் ஜயசுந்தர என்பரை பொலிஸார் சுட்டுக்கொன்றிருந்தனர்.
கொள்ளைகார கும்பலின் தலைவரென கருதப்படும் சாமர இந்திரஜித் ஜயசுந்தர தம்மீது கைக்குண்டை எறிவதற்கு முயற்சித்த போது, சுயபாதுகாப்பு கருத்தி சுட்டுக்கொலை செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளையர்களால் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமைக்காக, பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் கொலைசெய்யப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நல்லாட்சி அல்ல எனக் குறிப்பிட்ட நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, இது எமன் ஆட்சி எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த கொள்ளைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட கொஸ்கொட தாரக்கின் தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தாரக்கவின் தாயாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.