புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு!
20 Jun,2018
போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று நிராகரித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது ஜனாதிபதியும் , அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று மீண்டும் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அமைச்சர்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த அமைச்சரவைப் பத்திரம், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக, பொதுமக்கள், வழிபாட்டு இடங்கள் மற்றும் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்கும் இழப்பீடு வழங்குவதை தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால், போரில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.