ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும்! -
17 Jun,2018
ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினரது நகர்வுகள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
' ராஜபக்ஷவினருக்கு இந்த நாட்டையும் அதிகாரத்தையும் கொடுத்து விட்டால் இந்த நாடு பொருளாதார ரீதியில் பலமடையும் என மக்கள் நம்ப வேண்டாம். ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டு மக்கள் பசியுடனும் வெறுங்கையுடனுமே வீதியில் செல்ல வேண்டிவரும். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைககளை விதிக்க சர்வதேச நாடுகள் தயாராகிவிடும்.
இந்த அரசாங்கம் வெற்றிகொண்டுள்ள சகல நாடுகளின் ஆதரவும் மீண்டும் இல்லாது போகும். எமக்கு சர்வதேச நாடுகள் வழங்கிய சகல பொருளாதார சலுகைகளும் மீண்டும் தடுக்கப்படும். இதனால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் உருவாகும். இதனை மக்கள் மறந்துவிடக்கூடாது.ஆகவே மஹிந்த ராஜபக்ஷ என்ற நபர் ஓய்வு பெரும் வரையிலேயே கூட்டு எதிர்க்கட்சி பலம் இருக்கும். அதன்பின்னர் நடப்பவை வேடிக்கையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.