அமெரிக்கக் குடிமகன் என்ற காரணத்தால் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை. எனக்கு எந்தத் தடையும் இல்லை. அமெ ரிக்கா அவ்வாறான கருத்துக்க ளைக் கூறியதாக உறுதியான தக வல்களும் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் அவரைச் சந்தித்த பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது-
அமெரிக்கக் குடியுரிமை உள்ள காரணத்தால் என்னால் தேர்தலில் களமிறங்க முடியாது என்ற கருத்து தவறானது. அதற்கான தடைகள் எவையும் இல்லை. அமெரிக்காவும் அவ்வாறான கருத்துக்களை கூறியதாக உறுதியான தகவல்கள் எவையும் இல்லை. ஊடகங்களில் சில மாறுபட்ட கருத்துக்கள் எழுகின்றன. ஆனால் அவற்றை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் களமிறங்குவது அவசியம் என்றால் தேர்தலில் போட்டியிட எந்தச் சிக்கலும் வரப்போவதில்லை. நான் களமிறங்க வேண்டுமா? இல்லையா? அல்லது வேறு ஒருவர் களமிறக்கப்படுவாரா? என்பதை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும்.
இன்னமும் அதற்கான நேரம் ஏற்படவில்லை. நாம் பொருளாதார ரீதியாக அடுத்த இலக்குகள் குறித்து பயணிக்க வேண்டியுள்ளது. அடுத்து அமையவுள்ள எமது ஆட்சியில் பலமான பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. அந்த இலக்கில் நாம் சரியாக சென்றடைய வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை போன்று சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்று நாட்டின் நிலமைகள் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளன. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. மக்கள் வீதிகளில் நடமாடவும் அஞ்சுகின்றனர். எமது ஆட்சியில் மக்களின் சுதந்திரத்தை நாம் உறுதிப்படுத்தியிருந்தோம்.
இன்று ஒருபுறம் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம் மக்களின் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளது. இந்த அரசு இவை அனைத்துக்கும் பொறுப்புகூற வேண்டியுள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்தியும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை. ஆளுமை இல்லாத தலைமைகள் ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் நிலமை இதுவாகவே அமையும்.
இப்போது மக்கள் எம்மை சந்தித்து பேசுகையில் மீண்டும் சரியான மாற்றம் ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும் என்ற காரணத்தையே கூறுகின்றனர். நாம் மக்களுக்கு எடுத்துரைக்க முன்னர் மக்கள் எமக்கு பல விடயங்களை கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டு சரியான தெரிவுகளை நோக்கி மக்கள் பயணிக்க வேண்டும் என்றார்