அப்பாவிகள் படுகொலைகளை ஒப்புக் கொண்ட பசில்! - கோத்தாவுக்கு எதிராக
16 Jun,2018
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர் என்பதை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார். அவரது இந்தக் கருத்து கோத்தாபய ராஜபக்சவின் அரசின் நுழைவைத் தடுப்பதற்கானது என்று கோத்தாபய ராஜபக்ச ஆதரவாளர்கள் போர்க்டிகாடி தூக்கியுள்ளனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான சில செயற்பாடுகள் எல்லை மீறி சென்றதாக அம்பலாங்கொடையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற தென் மாகாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடான சந்திப்பின் போது, பசில் ராஜபக்ச கூறியிருந்தார்.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிலாபம் மீனவர் ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி மேற்கொண்ட கொலை, கட்டுநாயக்க ரொஷான் சனக்க கொலை உள்ளிட்ட சில சம்பவங்களை நினைவுகூர்ந்து கருத்து வெளியிட்டிருந்த பசில் ராஜபக்ச, அவை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எல்லை மீறி சென்ற சம்பவங்கள் எனவும் எதிர்கால ஆட்சியில் அப்படியான சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர் என்று பசில் ராஜபக்ச பகிரங்கமாக ஏற்றுக்கொண்டமையானது மேல் நோக்கி பார்த்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு ஈடானது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதன் காரணமாகவே பசில் ராஜபக்ச இவ்வாறு பகிரங்கமாக கூறியுள்ளதாகவும், எனினும் கோத்தபாயவுக்காக தாம் தொடர்ந்தும் குரல் கொடுக்க போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.