நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை கோத்தாபய ராஜபக்சவை இரட்டைக் குடியுரிமை
12 Jun,2018
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்தநிலையில், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் இருப்பதாக கூறப்படும் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டால் தான், அவர் தேர்தலில் களமிறங்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
இவர் தேர்தலில் களமிறங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முக்கிய தமிழ் அரசியல் தலைவர் ஒருவருடன், விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, “கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு இப்போது அமெரிக்கா இடமளிக்காது.
அவருக்கு எதிராக சுமத்தப்படும், போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்பளிக்கப்படும் வரை- கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதை தடுக்கும் நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும் என்று அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.