ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடிகள்: விசாரணைகள் ஆரம்பம்!
05 Jun,2018
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
முதற்கட்ட சாட்சி விசாரணைக்கு குறித்த நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவவின் தலைமையிலான சட்டக் குழுவொன்றும், விசேட பொலிஸ் விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தார்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ.ஹெரல் மற்றும் இலங்கை கணக்கு மற்றும் தணிக்கை தரநிலைகள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஜே.கே.கீகனகே ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா நிறுவனம் ஆகியவற்றில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதிமுதல் 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது