2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறுஸ
24 May,2018
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை பாரிய தவறு என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.
அங்கு பொதுமக்கள் மாத்திரம் நினைவுகூரப்படவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அஞ்சலிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமயளித்திருக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கள வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் இடையூறு விளைத்திருக்க வேண்டும் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய அவர் இதனை தான் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இதன்போது பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எனினும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் அனுமதி தேவைப்படுகிறது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டால் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் உதவியும் அதிகமாக கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். ஒன்றிணைந்த எதிரணித் தரப்பினர் உட்பட பலரது ஒத்துழைப்புக்களும் தனக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் தமிழ் மக்களின் வாக்குகளை உங்களால் பெறமுடியுமா என்று இதன்போது கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார் என்றும் தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.