போர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி
20 May,2018
இலங்கையில் யுத்தக் குற்றங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை. அது நாட்டிற்கு எதிரானவர்களினதும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்களினதும் கூச்சல்களாகும்.
அதேவேளை, நாட்டைப் பிரித்து ஈழத்தை உருவாக்கும் புலம்பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டிற்காக இன்னுயிரை நீத்த படையினரை நினைவுகூரும் முகமாக நேற்று அனுஷ்டிக்கப்பட்ட தேசிய படைவீரர்கள் இராணுவ வெற்றி தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி உட்பட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முப்படைத்தளபதிகள்,சபாநாயகர், மாகாண ஆளுநர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் வலையமைப்பு இன்றும் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது.
நாட்டைப் பிளவு படுத்தி ஈழ இராச்சியத்தை உருவாக்கும் செயல்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். தனி ஈழத்தை அமைக்கும் கனவு ஒரு போதும் நிறைவேறாது.
மூன்று தசாப்த கால போரை வெற்றி கொண்டு இன்றுடன் 9 வருடங்கள் ஆகின்றன.
இந்தப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகள் தொடர்பில் உறுதிப்படக் கூற இயலாது. முப்படைகளும் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்புப் படைகளைச் சார்ந்தவர்களின் உயிரிழப்புகள் குறித்து சில தகவல்களைக் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் சுமார் 28 ஆயிரம் வரையான முப்படையினர் கொல்லப்பட்டதோடு 40 ஆயிரம் பேர் வரை ஊனமுற்றுள்ளனர். பொது மக்களின் உயிரிழப்புக்கள் குறித்து இது வரையில் சரியான தரவுகளைக் கூற முடியாதுள்ளது.
ஆனால் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து அவதானத்தில் கொள்ளும் போது 30 வருட கால போரில் சுமார் 1 இலட்சம் பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம்.
இந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் மட்டும் உயிரிழக்கவில்லை. சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் கூட போரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அதே போன்று தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச் செல்வம் மற்றும் லக் ஷ்மன் கதிர்காமர் போன்றவர்களும் கொல்லப்பட்டனர். எனவே இழப்புக்கள் அனைத்து தரப்புகளுக்கும் காணப்பட்டது.
மூன்று தசாப்த கால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை சிலர் தவறாக கூறுகின்றனர். பலரும் இராணுவத்திற்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வித்தியாசம் தெரியாமல் கருத்து கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுகின்றவர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் வலையமைப்பு இன்றும் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. நாட்டை பிளவுபடுத்தி ஈழ இராச்சியத்தை உருவாக்கும் செயல்களை முன்னெடுக்கின்றது.
அண்மையில் நான் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றிருந்தபோது வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எனக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.
இவர்களுக்கு பின்னணியில் பல அரசசார்பற்ற சர்வதேச நிறுவனங்களும் காணப்படுகின்றன. எனவே தற்போது நாட்டுக்கெதிராக உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவை பொருளாதார ரீதியிலானதாகவும் அரசியல் ரீதியானதாகவும் காணப்படுகின்றன. கடந்த மூன்றரை வருட காலமாக புலிகளின் கருத்துக்களை தோல்வியடையச் செய்வதற்காக உலக நாடுகளில் செயற்பட்டோம்.
சர்வதேச நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்தி அந் தந்த நாடுகளில் இலங்கைக்கு எதிராக காணப்படக் கூடிய பிரிவினைவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தினோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் வெளிவிவகாரக் கொள்கையை முன் னெடுத்தோம்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்து முழுமையாக சுதந்திரம் அடைந்த போதிலும் உலக நாடுகளில் காணப்படுகின்ற எல்.ரீ.ரீயினரின் கருத்துக்களை இல்லாதொழிக்க செயற்படுவதென்பது முக்கியமான விடயமாகும்.
இதற்காக இன மத வேறுபாடின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் போராட வேண்டும்