மகிந்தவிடம் கட்சியைக் கொடுத்து விட்டு, அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவில் மைத்திரி?
19 May,2018
அரசியல் மீது வெறுப்படைந்திருப்பதாகவும், அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அப்போது, தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்குமாறும், அரசியலில் இருந்து விலகிய பின்னர் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டை கட்டியெழுப்ப மகிந்த ராஜபக்ச தயார் என்றால் அவரி்டம் கட்சியை கையளிக்க தயார் எனக் கூறியுள்ள ஜனாதிபதி, இதன் பின்னர் தனது எதிர்காலம் குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றோர் கூட தற்போது தம்முடன் நெருக்கமான தொடர்பில் இல்லை எனவும், சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மகிந்த அமரவீர போன்றோரின் செயற்பாடுகளிலும் பிரச்சினைகள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் 16 பேர் கொண்ட தமது அணியினர் மகிந்த ராஜபக்சவுடன் இணைய விரும்புவதாக கூறியுள்ளனர். ஜனாதிபதி இதற்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.பேச்சுவார்த்தை முழுவதும் ஜனாதிபதி வெறுப்படைந்த மனநிலையிலேயே காணப்பட்டதாக 16 பேர் கொண்ட அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.