ரூ. 140 மில்லியனை செலுத்த மஹிந்தவுக்கு காலஅவகாசம்
15 May,2018
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்தவேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியிருந்தார்.
இதனால் போக்குவரத்துச் சபைக்கு ஏற்பட்ட 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதோடு, அதற்கான கட்டணமான 140 மில்லியன் ரூபாயை இதுவரை செலுத்தவில்லையென மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது