பௌத்த விகாரைகளை அழித்து இந்துக் கோவில்களை கட்டியுள்ளார்கள்: சீறிச்சினந்த
11 May,2018
வட மாகாணத்தில் பல தசாப்தங்களாக காணப்படுகின்ற பௌத்த புராதன சின்னங்கள் மீது இந்து கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்வைத்துள்ளது.
வடக்கில் புத்தர் சிலைகளையோ அல்லது விகாரைகளையோ புதிதாக அமைப்பதற்கு அவசியமில்லை என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்கட்சி, தெற்கில் கோவில்களையும், பள்ளிவாசல், தேவாலயங்களையும் அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்படாத போதிலும், வடக்கில் மட்டும் எதிர்ப்பு வெளியிடப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கில் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு அங்கு ஏற்படுகின்ற எதிர்ப்பலைகள் தொடர்பாக இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன,
”வடக்கில் புதிதாக விகாரை அமைப்பதற்கு அவசியமில்லை. அங்கு தொல்பொருள் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட 184 இடங்கள் உள்ளன. வன்னி வனத்தில் புராதன இடங்கள் அழிக்கப்பட்டு அவற்றின் மீது கோவில்கள் அமைக்கப்பட்டு காணப்படுகின்றன. அவற்றை மீளமைப்பதற்கே இடமளிக்குமாறு கோருகின்றோம். விஜயன் எங்கே வந்தார் என்பதை பார்த்தால் அந்த புராதன இடங்கள் இன்றும் அங்கு உள்ளன. அவற்றை அழித்துள்ளனர். இவை அனைத்தையும் பலவந்தமாகவே கைப்பற்றியுள்ளனர். கிழக்கில் அழிக்கப்பட்ட புராதன சின்னங்களை மீளமைக்குமாறு கோருகிறோம். வீதிகள் அமைக்கும் நோக்கத்தில் இவற்றை அழித்துள்ளனர். புதிதாக அவற்றை அமைக்க அவசியமில்லை. அங்கு சிங்கள பௌத்த மக்கள் வாழ்ந்துள்ளனர். வன்னி காட்டுப் பகுதியில் வவுனியா மாமடுவில் இன்றும் பௌத்த புனிதச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றின் மீது இன்று கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதேவேளை இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் செயற்பாடு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
”எல்லா விடயங்களுக்கும் எதிர்கட்சித் தலைவர் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என்பதல்ல. சரியானதை சரி என்றும் பிழையானதை பிழை என்றும் கூற வேண்டும். எனினும் எதிர்கட்சித் தலைவர் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப செயற்படுகின்றார். வடக்கில் விகாரைகளை அமைக்க வேண்டாமென கூறுகிறார்கள் என்று கூறி 5000 ரூபாவை தனது பையில் இட்டுக்கொள்கின்ற சிலர் நாடாளுமன்றத்திற்குள் வந்து வடக்கில் விகாரைகளை அமைக்க வேண்டாமென தெரிவிக்கிறார்கள். எனினும் தெற்கிலுள்ளவர்கள் இங்கு கோவில், பள்ளிவாசல், தேவாலயங்களை அமைக்க வேண்டாமென கூறுகிறார்களா? வடக்கில் பேக்கரி உற்பத்தி, மீன்பிடி, வர்த்தக நிலையங்களை செய்தவர்கள் யார்? இந்த நாட்டில் வடக்கு என்று வேறொரு நாடு இல்லை. இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவரும் பருத்தித்துறையிலிருந்து சங்கமித்தை வரை இருக்கிறார்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.