சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை தரவிடாமல் ஜனாதிபதியே தடுத்தார்!! விஜேதாசவுக்கு வழங்கியமை தகுதியற்றது என்கிறார்
04 May,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சட்டம் ஒழுங்கு அமைச்சை எனக்கு தரவிடாமல் தடுத்தார் என்று நிலையான அபிவிருத்தி,வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நான் வனஜீவராசிகள் அமைச்சை பொறுப்பேற்றமையினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நினைத்த படி மிருகங்களை கொன்று பலவகையான இறைச்சி வகைகளை இனிமேல் சாப்பிட முடியாது. அந்த பயம் அவருக்கு உள்ளமையினாலேயே எனது பதவியை கொச்சைப்படுத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் அடுத்த அங்கமான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகளுக்கு புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயகலத்தில் நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வனஜீவராசிகள் அமைச்சினை தான் பொறுப்பேற்றமையின் ஊடாக நீண்டகாலமாக பெரும் பிரச்சினையாக காணப்படும் யானை மனித மோதலுக்கு உரிய தீர்வினை பெற்றுதர முயற்சிப்பேன்.
நான் சட்டம் ஒழுங்கு அமைச்சையே எதிர்பார்த்தேன். அதற்கே ஐக்கிய தேசியக் கட்சி என்னை பரிந்துரை செய்தது. எனினும் சட்டம் ஒழுங்கு அமைச்சை எனக்கு தரவிடாமல் தடுத்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாகும். அதன்காரணமாக பிரதமரிடம் கோரி இந்த அமைச்சை பெற்று எடுத்தேன்.
சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு என்னை ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரை செய்தாலும் அதனை வழங்குவதற்கு சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எதிர்ப்பு வெளியிட்டார்.
எவ்வாறாயினும் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பேணப்பட வேண்டும். மிகுதி உள்ள இரு வருடங்களிலாவது ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.
அத்துடன் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு அமைச்சு பதவி வழங்கியமை தகுதியற்ற விடயமாஞகும். என்றாலும் நம்பி தரப்பட்ட அமைச்சு பதவியை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். ஆகவே இனிமேலாவது சரியான முறையிலும் நம்பிக்கையான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும்.
வனஜீவராசி அமைச்சு எனக்கு ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அவமதிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவருடன் நான் முன்பு பாதுகாப்பு சபையில் ஒன்றாக கலந்துரையாடலில் இருக்கும் போது பன்றி உட்பட பலவிதமான இறைச்சி வகைகளை சாப்பிடுவார்.
இந்நிலையில் தற்போது நான் வனஜீவராசிகள் அமைச்சை பொறுப்பேற்றமையினால் அவருக்கு நினைத்த மாதிரி இனிமேல் இறைச்சி சாப்பிட முடியாது. அந்த பயம் அவருக்கு உள்ளது என்றார்.