அனைத்து அமைச்சுகளும் மைத்திரியின் நேரடிக் கண்காணிப்பில்!
27 Apr,2018
புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்ற கையோடு அனைத்து அமைச்சுகளையும் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சரவை மாற்றம் குறித்தான பேச்சுகளின்போது தனது இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி நேரடியாகவே தெரிவித்திருக்கிறார் என்று அறியமுடிகின்றது.
இதன்படி அனைத்து அமைச்சுகளின் செயற்பாடுகளையும் கண்காணிக்கும் வியூகம் ஒன்றை அமைக்கவுள்ள அதேசமயம், அமைச்சுகளுக்கு ஜனாதிபதி அதிரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவும் உத்தேசிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கும் மேலாக அமைச்சுகள் தொடர்பில் மாதந்தோறும் முன்னேற்ற அறிக்கையொன்றைப் பெறுவதற்கும், அமைச்சர்மாரின் பொதுமக்கள் சந்திப்பை வாரத்திற்கொரு முறை கட்டாயமாக்குவதற்கும் ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார் எனவும் அறியமுடிகின்றது.
ஜனாதிபதியின் இந்த உத்தேசத்திற்கு பிரதமர் முழு இணக்கப்பாட்டை வெளியிட்டிருப்பதாக மேலும் தெரியவருகின்றது – என்றுள்ளது.