வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம்
24 Apr,2018
– யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியா புறப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் சிங்கள மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ சிங்கள மாணவர்கள் முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது
நிர்வாகத்திடம் அனுமதி பெறாது இவ்வாறு புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதால், வளாக நிர்வாகம் அதற்கு தடை விதித்திருந்தநிலையில் வளாகத்தின் நிர்வாக கட்டிடத்தொகுதியை சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் உத்தியோகத்தர்களை வெளியேறவிடாமல் தடுத்திருந்தனர்.
இதனால் முதல்வர் காவல்துறையினருக்கு அறிவித்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் இருந்து நிர்வாக கட்டிடத்தொகுதி அமைந்துள்ள பகுதியை சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள், தாம் கொண்டு வந்த ஆலய வடிவிலான கூட்டினை தருமாறு கோரி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.
இதனையடுத்து வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய காவல்துறை குழுவுக்கும் வளாகத்தின் முதல்வருக்குமிடையில் பேச்சுவார்ததை இடம்பெற்றதன் பின்னர் மாணவர்களை சந்தித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு பல்கலைக்கழக மேலிடத்தில் இருந்து அனுமதி கிடைக்கவேண்டும். அவ்வாறு அரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும். அதுவரை எவ்வித முரண்பாடான நிலைமைக்கும் செல்லக்கூடாது என தெரிவித்ததுடன், சிங்கள மாணவர்களால் கொண்டுவரப்பட்ட புத்தரை வைப்பதற்கான கூட்டினை காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்
இந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் பேச்சு நடத்தி சுமூக நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குழு அங்கு புறப்பட்டுள்ளனர்