அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே
19 Apr,2018
அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கி அவரின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் உழைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கவுள்ள அபேட்சகர் பற்றி அனைவருக்கும் தெரியும். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடியவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உள்ளார். ஆகவே அவரைக் களமிறக்குவதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் சர்வதேசம் எமது நாட்டுடன் நல்லுறவைப் பேணவில்லை. எனினும் அந்நிலைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிக விலைக்கு விவசாய உரம் விநியோகிக்கும் வர்த்தகர்கள் பற்றி விவசாய அமைச்சுக்கு மக்கள் அறிவிக்க வேண்டும். அப்போது அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் விவசாய உரத்திற்கான தட்டுப்பாட்டை இல்லாது செய்து கேள்விக்கு ஏற்ப அதனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலதிக பயிர்ச்செய்கைக்கான உரத்தை விவசாய மத்திய நிலையத்தினூடாக ஆயிரத்து ஐந்நூறு ரூபாவிற்கு வழங்கப்போவதில்லை.தனியாரிடமிருந்தே மேலதிக பயிர்ச்செய்கைக்கான உரத்தை ஆயிரத்து ஐந்நூறு ரூபாவிற்கு பெற முடியும். விவசாய மத்திய நிலையத்தினூடாக ஐந்து ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கான உரமே வழங்கப்படும்.
தனியாரிடமிருந்து மேலதிக பயிர்ச்செய்கைக்காக விவசாயிகள் ஆயிரத்து ஐந்நூறு ரூபாவிற்கு உரம் கொள்வனவு செய்யும் போது அதற்காக அரசாங்கம் இரண்டாயிரம் ரூபா சலுகை விலையை தனியாருக்கு செலுத்துகிறது. அத்துடன் ஐந்து ஏக்கர் நெற்செய்கைக்காக ஐந்நூறு ரூபாவிற்கு வழங்கப்படும் உரத்திற்காக அரசாங்கம் மூவாயிரம் ரூபா சலுகை விலையை செலுத்துகிறது.
எனவே மேலதிக பயிர்ச்செய்கைக்கான உரத்திற்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாவிற்கு அதிகமான தொகையை வர்த்தகர்கள் அறவிடுவார்களாயின் அது குறித்து விவசாய அமைச்சின் 011 3036666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிடுமாறும் அவர் மேலும் கேட்டுகொண்டுள்ளார்.