தமிழர்கள் திரும்பி வர வேண்டும் - முதல்வர் விக்னேஷ்வரன்
15 Apr,2018
சித்திரை திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நூல் வெளியீட்டு விழா, தயாரிப்புகள் அறிமுக விழா நடந்தது. இதில் இலங்கை வடக்கு மாகாணம் முதல்வர் நீதிபதி விக்னேஷ்வரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் ஆளும் மத்திய அரசுக்கு பிரச்சினையில்லை என்று கூற முடியாது.
இரண்டு முக்கிய கட்சிகளும் சேர்ந்து ஆட்சி பொறுப்பை நடத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு 2 கட்சிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள்தான் காரணம் என மற்ற கட்சிகள் கூறி வருகின்றன. 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும். அனேகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இருந்தபோதிலும், இலங்கையில் தற்போது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிலை மயக்க நிலைதான். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து கூறப்பட்டு வரும் கோரிக்கைகள் மத்திய அரசு நிறைவேற்றி தரவில்லை. வடகிழக்கு மாகாண தமிழ் மீனவர்களை தொழில் செய்யவிடாமல் சிங்கள மக்கள் தடை விதித்து வருகின்றனர்.
தமிழர்களுக்கான இடங்களை எல்லாம் சிங்கள மக்கள் ஆக்ரமித்து விட்டதாக கூறி வருவதை விட, அரசே அதனை ஆக்கிரமித்திருப்ப தாகத்தான் தெரிகிறது. இதற்காக மாற்று இடங்கள் கொடுக்கப்படும் என கூறிய போதிலும், இதுவரை வழங்கப்படவில்லை. எங்களுடைய மக்கள் திரும்பி வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். பல லட்சம் பேர் தமிழர்கள் வாழ்ந்து வந்த நிலையில், படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு வெளிநாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் ஒரு லட்சம் தமிழர்கள் இருந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மாகாணத்திற்கு திரும்ப வர வேண்டும். ஏனென்றால் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு துறைகளில் சிங்களர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியா- இலங்கை உறவை பொறுத்த வரை, முன்போல மிக நெருக்கமாக இருக்கிறது என கூற முடியாது. அதற்காக இரு நாடுகளுக்கு இடையே விரிசல் என்றும் சொல்ல முடியாது. சீனாவுடன் இலங்கை அரசு வெளிப்படையாக கொண்ட உறவை தொடர்ந்து இது எந்தளவில் இந்தியாவை பாதிக்கும் என்பது போகப் போகதான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்