திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில் நல்லிணக்கம் ஏற்படாது : எம்.கே.சிவாஜிலிங்கம்
13 Apr,2018
“வடக்கு கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (11/04/2018) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மகாவலி எல் வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து, ‘மாயபுர” என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.
இதன் மூலம் கடந்த காலங்களில் அமைச்சர்களினால் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களும், இதேபோல மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழ் தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்து அவர்களுடைய இடங்களிலே சிங்கள தொழிலாளர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான அனுமதியினை தவறான முறையிலும், மோசடியான முறையிலும் கொடுத்துள்ளமையினால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் அங்கு சென்றோம்.
இந்த நிலைமைகளை உடனடியாக அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இத்திட்டங்களை உடன் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ஊடாக அனுப்பி வைத்துள்ளோம்.
இவ்விடயம் தொடர்பாக நாம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம். இப்பிரச்சினைகளை அரசு கைவிடும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய நல்லினக்கத்தினையோ அல்லது வேறு எதனையும் ஏற்படுத்த முடியாது.
அரசியல் அமைப்புக்கு முரணாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாண சபை சட்டத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது என்பதனை நாங்கள் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ளுகின்றோம்” என தெரிவித்தார்.