சம்பந்தனின் நிலைப்பாடே அரசாங்கத்தின் தற்போதைய பிளவுக்கு காரணம் : கீர்த்தி தென்னகோன்
13 Apr,2018
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசிய அரசாங்கத்தில் தற்போது பிளவுக்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு 4 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த காலத்திலிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில், தற்போது நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசிய அரசாங்கத்தில் தற்போது பிளவுக்கு காரணம்.
இரா.சம்பந்தன் ஒருபோதும் எதிர்க்கட்சி பதவியினை வகித்ததில்லை. தனக்கு தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடனும், தேவைகள் நிறைவேறியதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் செயற்பட்டு வருகின்றார்.
இது எதிர்க்கட்சி தலைமை பதவிக்கு பொருத்தமான பண்பல்ல. இரா. சம்பந்தன் தனது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார்.
எனினும், இரா. சம்பந்தன் வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்காகவோ அரசாங்கத்திடம் கைகோர்க்க வில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.