இராணுவ தளபதி மஹேஸ், யாழ்ப்பாண கட்டளை தளபதி ஹெட்டியாராச்சி
ஆகியோர் மக்களின் நிலங்களை முழுமையாக நிச்சயம் விடுவித்து தருவர்
வீடுகளை கையளிக்கும் வைபவத்தில் அரசாங்க அதிபர் வேதநாயகன் நம்பிக்கை
இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரின் பதவி காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் உள்ள பொதுமக்களின் நிலங்கள் முழுமையாக விடுவித்து தரப்படும் என்று நம்புகின்றார் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்தார்.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நல்லிணக்கபுரம் வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 பயனாளிகளுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் நேற்று வெள்ளிக்கிழமை வீடுகள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன.
பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறப்பு அதிதிகளாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம் வழங்கினர்.
இவ்வைபவத்தில் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றியபோதே அரசாங்க அதிபர் வேதநாயகன் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
- யாழ்ப்பாண தமிழ் மக்களின் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்த்து தர வேண்டும் என்பதில் இராணுவ தளபதி, யாழ். மாவட்ட கட்டளை தளபதி ஆகியோர் மிகுந்த அக்கறையுடனும், கரிசனையுடனும் உள்ளனர். இராணுவ தளபதியை பற்றி கூறுவதானால் அவர் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக முன்பு கடமையாற்றியவர். அவருடைய அக்காலத்தில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய நல்லிணக்கபுரம் வீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. அவர் எமது மக்களின் பிரச்சினைகளை மிக நன்றாகவே அறிந்தவர். அப்பிரச்சினைகளை உரிய முறையில் விரைவாக தீர்த்து தர வேண்டும் என்று விரும்புபவர்.
அதே போல தற்போது யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக பதவி வகிக்கின்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மிகவும் எளிமையானவர் மாத்திரம் அல்லர் பழகுவதற்கு இனிமையானவரும்கூட. எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தர வேண்டும் என்பதில் அவரும் மிகுந்த பேரார்வம் காட்டி வருகின்றார்.
எனவே இவர்கள் இருவரினதும் காலத்தில்தான் எமது காணிகள் விடுவித்து தரப்படும். ஏனென்றால் இவர்கள் இருவரும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருகின்ற விடயங்களை சிறந்த முறையில் அணுகு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படுகின்ற வைபவத்தில் இருவரும் பங்கேற்று இருப்பது பேருவகை தருகின்றது. மேலும் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டமாக இருந்தாலும் சரி வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி இராணுவத்தின் பங்களிப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றுடன்தான் அதை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிகின்றது. -
இவ்வைபவத்தில் விசேட அழைப்பின் பெயரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
, தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது
யாழில் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மஹேஸ் தெரிவிப்பு
காணிகளை விடுவித்து தருகின்ற விடயத்தில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என்று இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நல்லிணக்க வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி வைக்கின்ற சம்பிரதாயபூர்வ வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
யாழ். மாவட்டத்தில் பொதுமக்களின் அனைத்து காணிகளையும் வருகின்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு பரிசாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசாங்க அதிபர் என். வேதநாயகன் எம்மிடம் கோரி உள்ளார். இவற்றை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் எமக்கு ஆசை கிடையாது. அதே நேரம் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பில் நான் இருக்கின்றேன்.
இங்கு பிரசன்னமாகி உள்ள இராணுவ வீரர்களில் 90 சதவீதமானவர்களுக்கு சொந்த வீடு கிடையாது என்கிற ஒரு உண்மையை நான் சொல்ல வேண்டி உள்ளது. ஆனால் தமிழ் உறவுகளுக்கு வீடுகளை கட்டி கொடுத்து தமிழ் உறவுகளின் வாழ்க்கை, எதிர்காலம் ஒளிமயமானதாக பிரகாசிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஏனென்றால் மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்படுவதையும், அப்பாவி பொதுமக்கள் அதனால் பாதிக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே இத்தருணத்தில் எனது வீரர்களை அவர்களின் சேவை மனப்பான்மைக்காக பாராட்டுகின்றேன்.
500 ஏக்கர் நில பரப்பை மக்களுக்காக விடுவியுங்கள் என்று அரசாங்க அதிபர் வேதநாயகன் கோரி உள்ளார். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை அவருடன் பேசிய விடயங்கள் தொடர்பாக முன்னெடுத்து வருகின்றோம். பருத்தித்துறை முதல் காங்கேசன் துறை வரையான வீதியை நாம் பொதுமக்களின் பாவனைக்கு ஏற்கனவே விடுவித்து தந்து உள்ளபோதிலும் தேசிய பாதுகாப்பை ஒட்டி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை மாத்திரம் அதில் பயணிக்க அனுமதித்து உள்ளோம். இத்தருணத்தில் யாழ். மாவட்ட கட்டளை தளபதியையும் வைத்து கொண்டு நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். அது என்னவென்றால் அடுத்த வருட ஆரம்பம் முதல் இவ்வீதி வழியாக பொதுமக்களின் வாகனங்களும் பயணிக்க முடியும். நான் உங்களிடம் வாக்கு கேட்பதற்காக வந்து இதை கூறவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.
இங்கு வருகை தந்து உள்ள பெற்றோர் அவர்களுடைய பிள்ளைகளின் மனங்களில் நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை விதைத்து அவர்களை நல்லொழுக்கம் உள்ள நற்பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன். மீண்டும் ஒரு கொடிய யுத்தம் வேண்டாம் என்கிற செய்தியை உங்கள் பிள்ளைகள், உறவுகள், இளைய தலைமுறையினர் ஆகியோருக்கு எடுத்து சொல்லுங்கள் என்று இராணுவ தளபதி என்கிற வகையில் நான் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளுக்கு சென்று தப்பி விட எந்தவொரு சம்பந்தமும் இல்லாத அப்பாவிகள்தான் இங்கிருந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்கு வீடுகள் போன்றவற்றை நாம் இப்போது வழங்கி வைப்பது போல அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எம்மால் பிடுங்கி கொள்ள முடியும். அத்தகைய நிலைக்கு தயவு செய்து நீங்கள் ஆளாக வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன். நான் முன்முடிவு எதையும் மனதில் எடுத்து கொண்டவனாக திட்டமிட்டு இதை கூறவில்லை. எமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்காகவே கூறுகின்றேன்.
விடுவிக்க யாழ். கட்டளை தலைமையகத்தால் முன்னெடுப்புகள்
யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வருகின்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு பரிசாக பெருந்தொகை நிலத்தை விடுவித்து கொடுக்க உள்ளனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளை பலாலி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
தமிழ் - சிங்கள புத்தாண்டை ஒட்டி பெருந்தொகை நிலத்தை விடுவித்து தருவதற்கு உரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் நலன் ஆகிய இரு அம்சங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
நிலங்களை நாங்கள் பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் எமக்கு ஆசை கிடையாது. மக்களின் நிலம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை. இருப்பினும் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தியே நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அற்ற வகையில் நிலங்களை விடுவித்து கொடுப்பதற்கான அணுகுமுறைகளை கைக்கொள்கின்றோம்.