சீட்டா படையணி களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஜாக்கிரதை என்கிறார்கள்..
28 Mar,2018
சுட்டுக் கொலைசெய்தல், அச்சுறுத்தி கப்பம் பெறுதல், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புபட்ட அனைத்து திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழித்துக்கட்ட விஷேட செயற்றிட்டம் ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த நிலையில், பாதாள உலகக் குழுவினரைக் கைது செய்ய சீட்டா குறூப் (சிறுத்தை குழாம்) களத்தில் இறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் மோட்டார் சைக்கிள் சுற்றிவளைப்பு படையான சீட்டா குறூப் சிறு சிறு குழுக்களாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் செயற்படவுள்ளது.
சீருடையிலும், சிவில் உடையிலும் இந்த படையினர் பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களைத் தேடி விஷேட சுற்றி வளைப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீஃபின் நேரடி கட்டுப்பாட்டில் திட்டமிட்ட குற்றங்களை ஒழிக்கும் விஷேட அதிரடிப்படை பிரிவின் பிரதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் வழி நடத்தலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உளவுப் பிரிவுக்கு கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைவாக, கடந்த இரு நாட்களில் சீட்டா குறூப், ஏற்கனவே களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவன் சமயனின் சகாக்களைத் தேடி தலங்கம, அத்துருகிரிய மற்றும் யக்கலை பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டனர். அத்துடன் தற்போது இலங்கையில் இருந்து இந்திய ஊடாக தப்பிச் சென்று டுபாயில் இருப்பதாக நம்பப்படும் அங்கொட லொக்கா எனும் பாதாள உலக குழுவின் உறுப்பினர்களைத் தேடி வெயாங்கொடை நிட்டம்புவ பகுதிகளிலும் தேடுதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இதன்போது தேடப்பட்ட உறுப்பினர்கள் அப்பகுதிகளில் இருந்து தப்பிச் சென்றிருந்ததாக அறிய முடிகின்றது.