இலங்கை பிரதமரின் முக்கிய பொறுப்புகள் நிதி அமைச்சகத்துக்கு மாற்றம்
28 Mar,2018
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பில் இருந்த இரு முக்கிய அமைப்புக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இன்று நிதி அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
குறிப்பாக, இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்கு வர்த்தக மற்றும் பரிமாற்ற ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி நிதியமைச்சின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
நாணயக் கொள்கையை உருவாக்குதல், மத்திய வங்கியின் ஒருங்கிணைப்புடனான பேரியல் பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வருமான சேகரித்தல் மற்றும் செலவினங்களை கண்காணித்தல் ஆகியவை இனிமேல் நிதி அமைச்சினால் கையாளப்படும் என்றும் இதற்கான வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளூராட்சி சபைகள்: கட்சிகள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்
இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
அதேவேளை, நாணய சட்டம், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, பரிமாற்ற கட்டுப்பாட்டுச் சட்டம் உட்பட பல அம்சங்களும் பிரதமரின் பொறுப்பில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளன.
படத்தின் காப்புரிமை AFP
பிணை முறி ஊழல் விவகார சர்ச்சை மற்றும் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை ஆகியவற்றை அடுத்து ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
அவருக்கு அரசியலமைப்பு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.